ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுத்த மும்பை தாதா

May 13, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 13 (டி.என்.எஸ்) மறைந்த மும்பை தாதா ஒருவரது மகன் நடிகர் ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


‘கபாலி’ படத்தை தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். தற்போது இப்படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ‘2.0’ படம் முடிவடைந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்த நிலையில், இப்படம் குறித்து மறைந்த மும்பை தாதா ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் ரஜினிகாந்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், “நான் மறைந்த தாதா ஹாஜி அலி மஸ்தான் மிர்சாவின் வளர்ப்பு மகன். பாரதிய மைனாரிட்டி சுரக்‌ஷா மஹாசங் என்ற கட்சியை நிறுவியவர். இயக்குநர் ரஞ்சித்துடன் இணைந்து நீங்கள் நடிக்கவிருக்கும் படத்தில் எனது வளர்ப்பு தந்தையின் வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாக பத்திரிக்கைகளின் செய்தி படித்தேன். அதில் எனது வளர்ப்புத் தந்தை மிர்சாவை, கடத்தல்காரர் போன்றும் தாதா போலவும் சித்தரிக்க உள்ளீர்கள் என்பதை அறிந்தேன். இது வேண்டாத வீண் வேலை. என்னுடைய வளர்ப்புத் தந்தை எந்த வழக்கிலும் சிக்கவில்லை. அவருக்கு எந்த கோர்ட்டும் தண்டனை அளிக்கவில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில் அவரை தவறாக சித்தரிப்பது கடுமையாக கண்டனத்துக்குரியது. எனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை நல்ல முறையில் சித்தரிக்க வேண்டும். இல்லையென்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.